ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிறப்பு தடா நீதிமன்றம் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு 1998 ஜனவரி 28-ஆம் தேதியன்று மரண தண்டனை விதித்தது. அதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தாமஸ், வாத்வா மற்றும் குவாத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு, நான்கு பேரின் மரண தண்டனையையும் உறுதி செய்தது. பின்னர், அவர்கள் நால்வரும் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். 1999 அக்டோபர் 10-ஆம் தேதி அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர், 1999 அக்டோபர் 17-ஆம் தேதியன்று நான்கு பேரும் தமிழக ஆளுநரிடம் கருணை மனுக்களை தாக்கல் செய்தனர். அவை, அக்டோபர் 27-ஆம் தேதி ஆளுநரால் நிராகரிக்கப்பட்டன.
நளினிக்கு சிறையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றினால், அவரது குழந்தை அநாதையாகிவிடும் என்றும், எனவே நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்றும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், 2000 ஏப்ரல் 19-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டு, ஆளுநருக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. அதை, ஏப்ரல் 21-ஆம் தேதி ஆளுநர் ஏற்றுக் கொண்டார். அதையடுத்து, ஏப்ரல் 28-ஆம் தேதி முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மத்திய அரசின் வழியாக குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு அனுப்பியது.
அதன் பிறகு பத்தாண்டு காலம் உருண்டோடின. மூன்று பேரின் கருணை மனுக்களும் கிணற்றில் போடப்பட்ட கற்களாகக் கிடந்தன. 11-ஆம் ஆண்டு, அதாவது 2011 ஆகஸ்ட் 12-ஆம் தேதியன்று, கருணை மனுக்களைக் குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து தமிழக அரசுக்கு தகவல் வந்தது.
தற்போது, உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பில், கருணை மனுக்களை பரிசீலனை செய்வதற்கு 7 ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகள் வரை ஆகியுள்ளது என்றும், இந்தக் காலதாமதத்தால் ஏற்பட்ட மன ரீதியான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு 15 பேரின் மரண தண்டனை குறைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அளவுகோல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றவர்களுக்கு முற்றிலும் பொருந்தும் என்று சட்ட அறிஞர்கள் கூறுகின்றனர்.
தூக்குத் தண்டனையை உறுதி செய்யும்போது, கருணை மனுவை பரிசீலிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது என்பதை மட்டுமே கருத்தில் கொள்ளக்கூடாது, குற்றச்செயலின் கொடூரத்தன்மை போன்ற விஷயங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று புல்லர் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறினர். ஆகவேதான், புல்லருக்குத் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஆனால், கருணை மனு என்று வந்துவிட்ட பிறகு குற்றத்தின் கொடூரத்தன்மை போன்ற விஷயங்களை எல்லாம் பார்க்கக்கூடாது என்று தற்போதைய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீண்ட காலதாமதம் ஏற்பட்டிருக்குமானால், தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 3 ஆண்டுகள் காலதாமதம் ஏற்பட்டதற்குக் கூட, தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களின் கருணை மனுக்கள் 11 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதிக்கப்பட்டுள்ளன. எனவே, அவர்களின் தூக்குத் தண்டனை உறுதியாக ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும்" என்கிறார் மூத்த வழக்கறிஞரான தடா சந்திரசேகரன்.
1993-ஆம் ஆண்டு, தலைநகர் தில்லியில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணீந்தர் சிங் பிட்டாவை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேவேந்தர் சிங் புல்லருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கருணை மனு 2011 மே மாதம் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிங்வி மற்றும் முக்கோ பாத்யாயா ஆகியோர் அடங்கிய அமர்வு, புல்லரின் கருணை மனுவை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்பட்டது என்பதற்காக மட்டுமே, அவரது மேல் முறையீட்டு மனுவை பரிசீலித்துவிட இயலாது என்று 2013 ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பைத் தொடர்ந்து, புல்லரின் மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.
கருணை மனு மீதான பரிசீலனையில் ஏற்படும் தாமதத்தை மரண தண்டனையைக் குறைப்பதற்கான ஒரு காரணியாக கருதுவதைப் போலவே, தனிமைச் சிறையில் கைதிகள் அடைத்து வைக்கப்படுவதையும் உச்ச நீதிமன்றம் மிகவும் சீரியஸாகப் பார்க்கிறது. கருணை மனு மீது பல ஆண்டு காலம் முடிவு எதுவும் எடுக்கப் படாமல், என்ன ஆகுமோ என்ற மனநிலையோடு இருப்பது கொடுமையான வேதனையாகும். கருணை மனு நிராகரிக்கப்படுவதற்கு முன்னதாக, தூக்குத் தண்டனைக் கைதிகளை தனிமைச் சிறையில் அடைக்கக்கூடாது. அவ்வாறு அடைக்கப்பட்டால், அது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது" என்று இத்தீர்ப்பை எழுதிய தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருக்கிறார்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் 1998-ஆம் ஆண்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டது முதல் இன்று வரையில், கடந்த 14 ஆண்டுகளாக தினமும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தனிமைச் சிறையில்தான் அடைக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி, இவர்கள் மூவருக்குமான மரண தண்டனையை ரத்து செய்வதற்கு இதுவும் ஒரு முக்கிய அடிப்படைக் காரணி "
23 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. இது தூக்குத் தண்டனைக்கு எதிரான பிரச்சாரத்திற்குக் கிடைத்த வெற்றி. இறுதியாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறேன். எங்களின் வாதம் சரியானது என்பதை இத்தீர்ப்பு நிரூபிப்பதாக இருக்கிறது. இத்தீர்ப்பு என் மகனின் உயிரைக் காப்பாற்றும்" என்று உணர்ச்சிவயப்படுகிறார் அற்புதம் அம்மாள்.
இந்தியாவில் தற்போது மரண தண்டனை வழங்கப்பட்டவர்கள் சுமார் 500 பேர் இருப்பதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. சமீபத்தில், நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளில் மூன்று பேருக்கு மட்டுமே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாடும் பலருக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் விமோச்சனம் கிடைக்கலாம்.
கருணை மனு மீது முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் அதுவே, மரண தண்டனையைக் குறைப்பதற்குப் போதுமானது என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களுக்கும் பொருந்துமா? அவர்களுக்கு தூக்குதண்டனை ரத்தாகுமா என்று பலரும் எதிர்பார்த்த சமயத்தில் நேற்று உச்ச நீதிமன்றம் முருகன் , சாந்தன் , பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
மேலும் அவர்களின் விடுதலை குறித்து மத்திய மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என கூறியுள்ளது, உடனடியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளார் இருப்பினும் இந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பினால் புலனாய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில், தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய ப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி, தமி ழ்நாடு அமைச்சரவையின் முடிவு குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். எனவே, மத்திய அரசின் கருத்தினைப் பெறும் வகையில், திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்ற தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-ல் மாநில அரசுக்கு அளிக்கப் பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, திருவாளர்கள் சுதேந்திரராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி , ராபர்ட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.
இந்திய ஜனாதிபதி கருணை மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க 11 ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல எனவே அவர்களின் தண்டனை குறைக்கபட்டது சரியான தீர்ப்பு .. மேலும் மரண தண்டனைக்கு மேல் தண்டனை அனுபவித்து விட்டார்கள். ஒரு நிமிடத்தில் முடிக்க வேண்டிய தண்டனையை 23 ஆண்டுகள் அனுபவித்துள்ளார்கள் , எப்போது மரணம் வரும் என்று தினம் தினம் செத்துப் பிழைத்தார்கள், ஆயுள் தண்டனையானாலும் 14 ஆண்டுகளில் வெளிவர முடியும் ஆனால் மரணதண்டனை விதிக்கப்பட்டவன் சாவை நாளும் எதிர்நோக்கும் வேதனை ... இவ்வளவு வேதனைகளை அனுபவித்த ராஜீவ் கொலையாளிகளுக்கு விடுதலை அளிக்க முடிவுசெய்த தமிழக முதல்வருக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள் .........
0 comments:
Post a Comment