மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் 46 குரோமோசோம்கள் உண்டு. என்பது பற்றி நாம் முன்பே பார்த்துள்ளோம். அதைப்பற்றி இப்போது கொஞ்சம் நினைவு கூர்ந்தால்தான் ‘அரவாணிகளை’ப்பற்றி பூரணமாய் புரிந்து கொள்ள முடியும்.
மனிதனின் பல்வேறு உறுப்புகளுக்கும், அதன் செயல்பாடுகளுக்கும் அதன் குணாதிசயங்களுக்கும் காரணமான வெவ்வேறு மரபணுக்களை (Genes) கற்றையாக ஒருங்கே கொண்டிருப்பது தான் ‘குரோமோசோம்’. மனித உடம்பில் உள்ள கோடானுகோடி செல் ஒவ்வொன்றிலும், 46 குரோமோசோம்கள் உள்ளன. இந்த 46 குரோமோசோம்களும் இரண்டிரண்டாக மொத்தம் 23 ஜோடிகளாக காணப்படும். இவற்றில் 22 ஜோடிகள், பால் சம்பந்தப்படாத, உடலின் மற்ற அனைத்து மரபுப் பண்புகளையும் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துபவை. கடைசி 23-வது ஜோடி குரோமோசோம்கள் மட்டும் பாலினம் (Sex) சம்பந்தப்பட்டவை. அந்த ஜோடி, பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக X X- என்று பெண்களிலும், பார்ப்பதற்கு வேறுபட்டு, X Y என்று ஆண்களிலும் காணப்படும்.
இனப்பெருக்கத்தின் போது, ஆண்களில் உள்ள X மற்றும் Y ஆகியவையும், பெண்களில் உள்ள 2 தனித்தனி X களும், அளவில் மட்டுமல்ல பண்புகளிலும் சரிபாதியாக பிரிந்து, கரு உருவாக உதவும். தாம்பத்திய உறவில் ஈடுபடும் பெற்றோருக்கு உருவாகும் கருவில், ஆணின் விந்துவான அந்த ஒரு செல் உயிரியில் X ம், பெண்ணின் ஒரு செல் உயிரியான கருமுட்டையில் உள்ள X ம் இணைந்து, XX குரோமோசோம் உருவானால், அந்த கருமுட்டை பெண்ணாக வளரும்.
அதேபோல், ஆணின் Y ம் பெண்ணின் X ம் இணைந்து XY குரோமோசோமாக உருவானால், அந்த கருமுட்டை ஆணாக வளரும். அதாவது உருவாகும் கருவில் Y குரோமோசோம் இருந்தால், அது ஆணாகவும், Y இல்லையென்றால் அது பெண்ணாகவும் வளர்ச்சியடைகிறது எனலாம். அதே நேரம் மிகச்சில வேளைகளில், (ஆயிரத்தில் இரண்டு) இந்த 23-ம் ஜோடி இவ்விதம் முறைப்படி இரண்டாக பிரிந்து இணைவதில்லை. உதாரணமாக, உருவாகும் கருவில் X அல்லது Y என்ற ஒற்றை குரோமோசோம் மட்டுமே காணப்படலாம். அதனால், இவர்கள் 45Y ஆகவோ, (ஆண்பண்புகள் குறைவான ஆண்கள் -சாத்தியமில்லை அல்லது இந்த கரு நிலைக்காது) அல்லது 45X (பெண்பண்புகள் குறைந்த பெண்கள் -மிக அரிது) ஆகவோ இருப்பர்.
சிலநேரம், இதுபோன்று உருவாகும் கருவில், இரண்டிற்கும் மேற்பட்ட குரோமோசோம்களும் காணப்படலாம். இவர்கள் ‘பெண்பண்புகள் அதிகம் கொண்ட பெண்கள்’ (47XXX), அல்லது ‘ஆண்பண்புகள் அதிகம் கொண்ட ஆண்கள்’ (47XYY) அல்லது ‘பெண்பண்புகள் கொண்ட ஆண்கள்’ (47XXY) என வித்தியாசமானவர்களாக இருப்பர். இவ்விதம் குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் குறைவைப் பொறுத்தும், இவற்றில் Y குரோமோசோம் இருப்பதையும், இல்லாததையும் பொறுத்தும் கூட, அந்த கருவானது வளர்ச்சியடையும் போது, அதில் உட்புறமான மற்றும் வெளிப்புறமான பாலின இன உறுப்புக்கள் உருவாகுவது தீர்மாணிக்கப்படுகிறது. இப்போது ஓரளவு உங்களுக்கு புரிந்திருக்கும் என்று எண்ணுகிறோம்.
0 comments:
Post a Comment